ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலங்குளம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மனோஜ் பாண்டியன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் முதன் முதலாக ஆலங்குளம் வந்தார். அவருக்கு ஒன்றிய மற்றும் நகர அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மனோஜ் பாண்டியன், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கும், காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி
தென்காசி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். அவர் சென்னையில் இருந்து தென்காசிக்கு வந்தார்.
தென்காசி ரெயில் நிலையத்தில் அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி ஆரத்தி எடுக்க திரளான தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் அவருக்கு கூலக்கடை பஜார், காசி விசுவநாத சுவாமி கோவில், வாய்க்கால் பாலம், ஆசாத் நகர் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
கடையநல்லூர்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா அறிவிக்கப்பட்டார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு செங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு நகர அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மனோகரன், தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பாவை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.