குடும்பத்தினர், சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது

பணம் பறிமுதல்

Update: 2021-03-12 20:37 GMT
விருதுநகர், 
தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர், வியாபாரிகள் மற்றும் குடும்பத்தினர் வாகனங்களில் கொண்டு செல்லும் பணத்தை நியாயமான காரணங்களை தெரிவித்தாலும் பறிமுதல் செய்வதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பறக்கும் படை 
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-  
 தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புக்கு பின்பு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணம் பறிமுதல் 
 தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதற்கு காரணமே தேர்தல் நடைமுறைகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற நடைமுறைகளை தவிர்ப்பதற்காகத்தான்.
 ஆனால் நடைமுறையில் பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் வாகனங்களில் செல்லும் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுகிறதே தவிர அதுகுறித்து எந்தவித நியாயமான காரணங்கள் கூறப்பட்டாலும் அதை ஏற்கும் நிலையில் இல்லை.
ஏற்புடையதல்ல
 சிறு வணிகர்களும், குடும்பத்துடன் செல்பவர்களும் ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
 குடும்பத்தினர் திருமணத்திற்காக நகை மற்றும் ஜவுளி வாங்குவதற்காகவும், பொருட்கள் வாங்குவதற்காகவும் பணம் கொண்டு செல்வது இயல்பு தான். இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் வைத்துக் கொள்ள முடியாது. அதே போன்று சிறு வணிகர்கள் பொருள்கள் கொள்முதல்செய்வதற்காக செல்லும் போதும் அதற்கான ஆவணங்களை எடுத்துச் செல்ல முடியாது.
தனியார் நிறுவனங்கள் 
 பெரு வணிகர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆவணங்களுடன் பணம் எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
 சிறு வணிகர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. மாவட்டத்தில் இதுவரை பறிமுதல் செய்த பணம் எல்லாமே சிறுவணிகர்களிடம் இருந்து தான். வங்கியில் செலுத்த கொண்டு செல்லும் பணத்தைக்கூட பறிமுதல் செய்யும் நிலை உள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதுவரை வாகனங்களில் அரசியல் கட்சியினர் பணம் கொண்டு சென்றதாக எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை.
அறிவுறுத்தல் 
எனவே மாநில தலைமைதேர்தல் அதிகாரி அனைத்து கலெக்டர்களுக்கும் வாகனங்களில், குடும்பத்தினரும், சிறு வணிகர்களும் தங்களது அத்தியாவசிய தேவைக்காக கொண்டு செல்லப்படும் பணத்திற்கு நியாயமான காரணங்களை கூறும்பொழுது உரிய விசாரணை நடத்தி பறிமுதல் செய்வதை தவிர்க்குமாறு பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுவினருக்கும் உத்தரவிடுமாறு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும். தேர்தல் நடைமுறை என்பது பொதுமக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இருக்கக்கூடாது.
எனவே மாநில தலைமை தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
 இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்