தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் ஈரோட்டில் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் பேட்டி
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
3 வேட்பாளர்கள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 3 இடங்களுக்கு, நிர்வாகிகள் கூடி வேட்பாளர் தேர்வு செய்துள்ளனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, கோவை மாவட்டம் சூலூரில் கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் பிரமியர் செல்வம் என்ற காளிச்சாமி ஆகியோர் நிறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களுக்கு சேவை
அதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறும்போது, ‘தி.மு.க. கூட்டணியுடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி நிறைவாக 3 தொகுதிகளை பெற்று வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். வெற்றி பெறும் கூட்டணியில் இடம் பெறுவதை, கொங்குநாடு மக்கள் விரும்புவர். அதேபோல் இந்த முறை தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அந்த ஆட்சியில் சட்டசபையில் கொ.ம.தே.க. இடம் பெறும்.
தி.மு.க. சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவதில் எந்த நெருடலும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்று எம்.பி.யான சின்ராஜ் மக்கள் சேவையை செய்கிறார். அதேபோலத்தான் நாங்களும் மக்களுக்கான சேவையை செய்வோம். கொங்கு மண்டலத்துக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெறுவோம்.
பொய்யான வாக்குறுதி
தி.மு.க. தேர்தல் அறிக்கையாக குடும்ப தலைவிக்கு ரூ.1,000-ம் தருவோம் என அறிவித்தார்கள். அதனை மக்கள் ஏற்றார்கள். அதைப்பார்த்து அ.தி.மு.க.வினர் ரூ.1,500 தருவோம், சிலிண்டர் தருவோம் என்ற பொய்யான வாக்குறுதியை மக்கள் ஏற்க மாட்டார்கள். கொங்கு மண்டலத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து நாங்கள் தெரிவித்து உள்ளோம். அது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.