தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது முதல் நாளில் வேட்பாளர் யாரும் வரவில்லை
தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் மனுதாக்கல் செய்ய வேட்பாளர் யாரும் வரவில்லை.
தர்மபுரி,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதியிலும் தொடங்கியது. தர்மபுரி சட்டசபை தொகுதிக்கு தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்திலும், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு அந்தந்த தாலுகா அலுவலகத்திலும், அரூர் (தனி) தொகுதிக்கு அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான முதல் நாளில் மனு கொடுக்க வேட்பாளர் யாரும் வரவில்லை. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அனைத்து இடங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அலுவலக வளாகத்துக்குள் செல்லும் அனைத்து இருசக்கர வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் பிரதாப், தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, சீனிவாசன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.