வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காததை கண்டித்து விஜய அச்சம்பாடு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காததை கண்டித்து விஜய அச்சம்பாடு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இட்டமொழி:
வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காததை கண்டித்து விஜய அச்சம்பாடு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் புறக்கணிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மாவட்டத்தில் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இட்டமொழி அருகே உள்ள விஜய அச்சம்பாடு கிராமத்தில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடங்கினர். அங்கு உள்ள சுமார் 100 வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் கடந்த 3 ஆண்டுகளாக அலட்சியம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அறிவிப்பு பலகை
இதனை கண்டித்து விஜய அச்சம்பாடு மக்கள் சங்கம், பாசப்பறவைகள் மக்கள் நலச்சங்கம் மற்றும் ஊர் ெபாதுமக்கள், அனைத்துக்கட்சியினர் சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விஜய அச்சம்பாட்டில் காமராஜர் சிலை அருகே தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மற்றொரு கிராமம்
நாங்குநேரி-களக்காடு ரோடு அருகில் கலுங்கடி கிராமத்தில் நேதாஜி நகர் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூரங்குடியில்தான் வாக்குச்சாவடி அமைக்கப்பட இருக்கிறது.
எனவே கிராம மக்கள் வசிக்கும் பகுதியில் வாக்குச்சாவடி அமைத்து தரும்படி கடந்த தேர்தலில் கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் சமரசம் செய்து கோரிக்கையை நிறைவேற்றி தர உறுதியளித்தனர். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
எனவே வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.