திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.;
திருவாரூர்,
மகா சிவராத்திரியையொட்டி நாடு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, திருவாரூர் ஆகிய ஊர்களில் இருந்து கலந்து கொண்ட நாட்டிய கலைஞர்கள் திருவிளையாடல், சிவன் ருத்ரதாண்டவம் ஆகிய சிவன் பாடல்களுக்கு நடனமாடினர்.
பக்தர்கள் கண்டு ரசித்தனர்
ஆண்டு தோறும் சிவராத்திரி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி 6 நாட்கள் வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் இரவு 3 மணி நேரம் மட்டுமே நடத்த மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.