சூரியன், இரட்டை இலையை மறந்து விவசாயிகளை நினைத்து எங்களுக்கு வாக்களியுங்கள் கிருஷ்ணகிரியில், சீமான் பேச்சு
‘சூரியன், இரட்டை இலையை மறந்து விவசாயிகளை நினைத்து எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சீமான் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி நிரந்தரி, பர்கூர் கருணாகரன், வேப்பனப்பள்ளி சக்திவேல், ஓசூர் கீதாலட்சுமி, தளி மேரி செல்வராணி, ஊத்தங்கரை வக்கீல் இளங்கோவன் ஆகியோரை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி 5 ரவுண்டானாவில் திறந்தவேனில் நின்றபடி சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாக தற்போது உள்ள கட்சிகள் மாற்றி உள்ளனர். இதனை நாங்கள் மாற்ற நினைக்கிறோம். நான் தனித்து நின்று போராடுவதால் தான் என்னை பின் தொடர்ந்து அனைவரும் வருகின்றனர். சரியான, சமமான கல்வியை கொடுக்க நினைக்கிறோம். தனியார் அளிக்கும் தரமான கல்வி, மருத்துவத்தை அரசு கொடுக்க முடியாதா?. மின்சாரத்துறைக்கு மட்டும் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் உள்ளது. அரசு மின்சாரத்தை உற்பத்தி செய்து தடையில்லா மின்சாரம் வழங்க முடியாதா?.
பணம் தரமாட்டோம்
நாங்கள் வாக்களிக்க பணம் தரமாட்டோம். ஊழல், லஞ்சத்திற்கான விதையே வாக்களிக்க பணம் கொடுக்கும்போதுதான் தொடங்குகிறது. வாக்களிக்க பணம் கொடுக்க வருபவர்களிடம் ஆயிரம், ரூ.500 வாங்க வேண்டாம். ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் கேளுங்கள். அப்போது தான் வாக்களிப்பேன் என கூறுங்கள். மண்ணையும், மக்களையும் நேசிப்பவர்கள் நாம் தமிழர் கட்சியினர்தான்.
தி.மு.க., அ.தி.மு.க.வை வெற்றி பெற வைப்பது வழக்கமான நிகழ்வு. நாம் தமிழரை வெற்றி பெற வைப்பது வரலாறு. இந்த முறை சூரியன், இரட்டை இலையை மறந்து விவசாயிகளை நினைத்து எங்களுக்கு வாக்களியுங்கள். இந்த ஒரு முறை 5 ஆண்டுகள் எங்களை நம்பி தமிழகத்ைத ஒப்படையுங்கள். வாக்குப்பதிவின் போது எந்திரத்தில் விவசாயி சின்னத்தை தேடி நன்றி என தொடுங்கள். இந்த நாடும், மக்களும் நன்றாக வாழ நாம் தமிழர் ஆளவேண்டும். மாற்றத்தை விரும்பும் பொதுமக்கள், நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்.
மக்களின் பிரச்சினை
என்னை சிலர் ஏன் கூட்டணி வைக்கவில்லை என கேட்கிறார்கள். கூட்டணி வைத்து 10 சீட்டுகளை வாங்கி நாங்கள் சட்டசபை செல்ல விரும்பவில்லை. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
இதே போல சூளகிரி ரவுண்டானா, ஓசூர் பஸ் நிலையம், தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் ஆகிய இடங்களில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பேசினார்.