மனைவி, குழந்தைகள் கண்முன் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

மனைவி, குழந்தைகள் கண்முன் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.;

Update: 2021-03-12 17:39 GMT
கோவை,

கோவையை அடுத்த சூலூர் ராவுத்தர் பிரிவு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


சம்பவத்தன்று தாமோதரன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதை அவருடைய மனைவி கண்டித்ததால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அமுதா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

தற்கொலை மிரட்டல்

இதனால் வேதனை அடைந்த தாமோதரன் தனது மனைவியை தொடர்புகொண்டு குடும்பம் நடத்த வீட்டிற்கு வருமாறு தினமும் அழைத்து வந்தார். அதற்கு அமுதா மறுப்பு தெரிவித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று காலையில் தாமோதரன், தனது மனைவிக்கு போன் செய்து நீ என்னுடன் வாழ வராவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

இதனால் அமுதா குழந்தைகளை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். அவர்களின் கண் முன், தாமோதரன் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரின் கியாசை திறந்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார். 

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியேறிக் கொண்டு இருந்ததால் அமுதா அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் தனது கணவரை இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் வீட்டில் ஒரு பகுதியின் சுவர் இடிந்து விழுந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் குடும்ப தகராறில் மனைவியை பயமுறுத்துவதற்காக சிலிண்டரை வெடிக்க செய்வதாக தாமோதரன்  தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் தாமோதரனை எச்சரித்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்