ராமநத்தம் அருகே ரத்த காயங்களுடன் விவசாயி பிணம் கொலையா போலீஸ் விசாரணை
ரத்த காயங்களுடன் விவசாயி பிணம்
ராமநத்தம்,
பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை(வயது 50), விவசாயி. இவர் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த ஆவட்டி கருப்புசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி, 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் பிச்சை பிள்ளை இன்று அதிகாலை தான் படுத்திருந்த கட்டிலில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி ராமநத்தம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலையா
அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ராமநத்தம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிச்சை பிள்ளை உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தடயங்கள் சேகரிப்பு
இதற்கிடையே கடலூர் கைரேகை பிரிவு சப்- இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், சுரேஷ், மதுமிதா நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிச்சைபிள்ளை உடலில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் பிச்சை பிள்ளை பிணமாக கிடந்த இடத்தில் இருந்து அங்குள்ள மெயின் ரோடு வரை ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சை பிள்ளை ஆடு வளா்ப்பு தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வனவிலங்குகள் ஏதேனும்அடித்துக் கொன்றதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.