கார்- வேன் நேருக்குநேர் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலி
ராமநாதபுரம் அருகே கார்- வேன் நேருக்குநேர் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் அருகே கார்- வேன் நேருக்குநேர் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீன் விற்பனை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பனைக்குளம் கிராமத்தில் இருந்து தினந்தோறும் மீனவர்கள் மீன் வேனில் சென்று மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மீன்களை வாங்கி வந்து பனைக்குளம் மீன் மார்க்கெட்டில் விற்பது வழக்கம்.
நேற்று ஒரு வேனில் பனைக்குளத்தில் இருந்து 4 மீனவர்கள் ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் நோக்கி சென்றனர். அப்போது உச்சிப்புளி அருகே அதிகாலை 4.30 மணியளவில் ராமேசுவரத்தில் இருந்து அதிக வேகத்தில் வந்த காரும் வேனும் நேருக்குநேர் மோதின. இதில்வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வேன் டிரைவர் பனைக்குளத்தைச் சேர்ந்த பஷீரின் (வயது 45) கால்கள் வேனில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மண்டபத்தைச் சேர்ந்த பனைக்குளத்தில் வசித்து வரும் சீனியம்மாள் (60) சம்பவ இடத்திலேயே பலியானார். வேதாளைச் சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர்் ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் டிரைவர் பஷீர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். காரில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த காசி விக்னேஷ் என்பவரும் காயமடைந்து் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணை
இது சம்பவம் குறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார், தனிப்பிரிவு தலைமை காவலர் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு விபத்தில் 2 வாலிபர்கள் பலி
ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 27) மற்றும் மணி (23) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் அருகே தேர்போகி என்ற கிராம திருவிழாவிற்கு சென்றுவிட்டு திரும்பி உள்ளனர். அப்போது சித்தார்கோட்டை அருகில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பனை மரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.