விருத்தாசலம் பகுதியில் அனுமதியின்றி பார் நடத்திய 4 பேர் கைது

அனுமதியின்றி பார் நடத்திய 4 பேர் கைது

Update: 2021-03-12 17:20 GMT
விருத்தாசலம்,
விருத்தாசலம் பகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளின் அருகே சிலர் அனுமதியின்றி மது பார்கள் நடத்தி வருவதாக மாவட்ட டாஸ்மாக்  நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
அதன்பேரில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் மற்றும் டாஸ்மாக் சில்லறை விற்பனை உதவி மேலாளர் ஆறுமுகம், டாஸ்மாக் கணக்குப் பிரிவு உதவி மேலாளர் தேவகண்ணன் ஆகியோர் தலைமையிலான 3 குழுவினர் தனித்தனியாக விருத்தாசலம் பகுதி டாஸ்மாக் கடைகள் அருகே அரசு அனுமதியின்றியும், தேர்தல் விதிமுறைகளை மீறியும் பார்கள் இயங்குகிறதா? என இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலை, கருவேப்பிலங்குறிச்சி புறவழிச்சாலை மற்றும் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, விருத்தாச்சலம் ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே அனுமதியின்றியும், தேர்தல் விதிமுறைகளை மீறியும் மதுபார்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பார்களில் இருந்த மொத்தம் 350 மதுபாட்டில்கள் மற்றும் 2 சிலிண்டர்கள், கியாஸ் அடுப்புகள், குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அனுமதியின்றியும் விதிமுறைகளை மீறியும் பார்கள் நடத்தி வந்த பேரலையூர் கிராமத்தை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் வீரபாண்டியன் (வயது 32), வி.குமாரமங்கலத்தை சேர்ந்த சின்னதுரை மகன் தங்கதுரை (32), கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வேல்முருகன் (34), காரையூரை சேர்ந்த மாயவேல் மகன் அருள் (38) ஆகிய 4 பேரையும் பிடித்து விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு, இதுபற்றி புகார் கொடுத்தனர். 
அதன்அடிப்படையில் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து, அருள் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்