கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புகுழு அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் தொகுதி
ரிஷிவந்தியம் அடுத்த மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் ரிஷிவந்தியம் தொகுதி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சாமிதுரை தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் குன்னியூர் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த்குமார் என்பவர் எந்தவித ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 20ஆயிரம் எடுத்து வதந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை துணை தேர்தல் நடத்தும் அலுவலர் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.
உளுந்தூர்பேட்டை
அதேபோல் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வேல்முருகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.88 ஆயிரத்து 470 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உளுந்தூர்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்து வந்தது குறித்து காரில் வந்த 3 இளைஞர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கராபுரம் தொகுதி
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி செல்லதுரை தலைமையில் போலீஸ் ஏட்டுகள் சங்கரநாராயணன், சுந்தரேசன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று குளத்தூர் பிரிவு சாலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சங்கராபுரத்தை சேர்ந்த அரவிந்தர் என்பவர் எந்தவித ஆவணமும் இல்லாமல் கொண்டு வந்த ரூ.56 ஆயிரத்து 620-ஐ பறிமுதல் செய்து சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சையத்காதர், சத்யநாராயணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மண்டல துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, தலைமையிடத்து துணை தாசில்தார் வினோத் உடனிருந்தனர்.
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணி, ஏட்டு ராஜன் ஆகியோரை கொண்ட குழுவினர் சின்னசேலம் ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சின்னசேலம் தாலுகா, மேல் நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை பறிமுதல் செய்து, சங்கராபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர்.