ரூ.45 லட்சம்-45 பவுன் நகையை மோசடி செய்த பெண் கைது

ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.45 லட்சம் மற்றும் 45 பவுன் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-12 17:03 GMT
நாகப்பட்டினம்:
ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.45 லட்சம் மற்றும் 45 பவுன் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். 
ஓய்வு பெற்ற கண்டக்டர் 
நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது61).அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலை பராமரித்து வருகிறார். இந்த கோவிலுக்கு நாகையை சேர்ந்த ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் அவரது மகள் ராஜேஸ்வரி(36) ஆகியோர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அப்போது ராஜேஸ்வரிக்கும், சுப்பிரமணியனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுப்பிரமணியனிடம் அதிக பணம் மற்றும் நகைகள் இருப்பதை அறிந்து கொண்ட
ராஜேஸ்வரி தனக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அந்த சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளதை தெரிந்து கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை கேட்டு வங்கி கணக்குகளை முடக்கி விட்டனர். இதனால் ரூ.45 லட்சம் கொடுத்தால் வருமான வரித்துறைக்கு வரியை செலுத்தி விட்டால் வங்கி கணக்கு விடுவிக்கப்படும். பின்னர் உங்களுக்கு பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சுப்பிரமணியன் தன்னிடம் இருந்த ரூ.45 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் 
மீண்டும் ராஜேஸ்வரி வருமான வரித்துறைக்கு பணம் செலுத்தவேண்டும் என கூறி ரூ.10 லட்சம் பணம் கேட்டார். அதற்கு சுப்பிரமணியனை நம்ப வைக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரி போல் தனது நண்பர் ராகுலை நேரடியாக அழைத்து சென்று பேச வைத்துள்ளார். இதை நம்பிய சுப்பிரமணியன் தன்னிடம் பணமில்லை என்று கூறி தனது மகள் பாரதியின் 45 பவுன் நகைகளை எடுத்து அவரிடம் கொடுத்தார். இதையடுத்து ரூ.45 லட்சம் மற்றும் 45 பவுன் நகைகளை வாங்கி சென்ற ராஜேஸ்வரி பல மாதங்களாகியும் அதை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுப்பிரமணியன் கடந்த ஜனவரி 6-ந் தேதி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகா‌‌ஷ் மீனாவிடம் புகார் கொடுத்தார்.
பெண் கைது 
அதன்பேரில் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜேஸ்வரி அவரது தந்தை ராமகிரு‌‌ஷ்ணன், தாய் சாந்தா, தங்கை நந்தினி மற்றும் உறவினர்கள் முருகன், ராகுல், வெங்கடபாலாஜி, ராமு, ராஜா ஆகிய 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இருந்த ராஜேஸ்வரியை இன்று போலீசார் கைது செய்தனர்.  மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்