கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் வாழ்க்கை குறிப்பு
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேனி:
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதில் தேனி மாவட்டம் கம்பத்தில் ராமகிருஷ்ணன், போடியில் தங்கதமிழ்செல்வன், ஆண்டிப்பட்டியில் மகாராஜன், பெரியகுளத்தில் (தனி) சரவணக்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு விவரம் வருமாறு:-
கம்பம்-ராமகிருஷ்ணன்
கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணனுக்கு வயது 72. எம்.ஏ. தத்துவவியல் படித்துள்ளார்.
கம்பம் ராமையன் 2-வது தெருவில் வசித்து வருகிறார். கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், தீபலட்சுமி என்ற மகளும், வசந்தன் என்ற மகனும் உள்ளனர்.
1972-ம் ஆண்டு தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். கட்சியில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர், மாநில விவசாய அணி துணை தலைவர், மாவட்ட செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். தற்போது தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.
1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
அதன்பி்ன்னர் கடந்த 1994-ம் ஆண்டு வைகோ ம.தி.மு.க.வை தொடங்கியபோது இவர் அதில் இணைந்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கம்பம் தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க.வில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து அதே ஆண்டு நடந்த கம்பம் தொகுதி இடைத்தேர்தலிலும், 2011-ம் ஆண்டு் நடந்த தேர்தலிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவி வகித்துள்ளார்.
போடி-தங்கதமிழ்செல்வன்
போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்கதமிழ்செல்வனுக்கு வயது 60. எம்.ஏ. வரலாறு படித்துள்ளார். பிரமலைக்கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர். கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி தென்றல் நகரில் வசித்து வருகிறார்.
இவருடைய மனைவி பாண்டியம்மாள் காரைக்குடி அரசு சிக்கரி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.
மகள் சாந்தினி டாக்டராக உள்ளார். மகன் நிஷாந்த் பி.எஸ்.சி. படித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார்.
தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இருந்தபோது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பின்னர் அ.ம.மு.க.வில் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். தி.மு.க.வில் இணைந்த அவருக்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
தற்போது தி.மு.க. தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். 2001, 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002-ம் ஆண்டு ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
2003-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் 2009-ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளராகவும், 2019-ம் ஆண்டு அ.ம.மு.க. வேட்பாளராகவும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததால் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி-மகாராஜன்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாராஜனுக்கு வயது 66. விவசாயியான இவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சொந்த ஊர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தனம்பட்டி. தற்போது ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் வசிக்கிறார்.
பிரமலைக்கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், சேதுராஜா என்ற மகனும், சாதனா என்ற மகளும் உள்ளனர். 1980-ம் ஆண்டு தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார்.
ரெங்கசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக 2 முறையும், ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவராக ஒருமுறையும் பதவி வகித்துள்ளார். தற்போது ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாகவும், கட்சியில் ஆண்டிப்பட்டி ஒன்றிய பொறுப்பாளராகவும் உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் இவர் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தனது உடன் பிறந்த தம்பி லோகிராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியகுளம்-சரவணக்குமார்
பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சரவணக்குமாருக்கு வயது 50. பி.இ., எம்.பி.ஏ., படித்துள்ளார். பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி காலனியில் வசித்து வருகிறார்.
இவருக்கு சரிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளார்.
இவர் 2000-ம் ஆண்டு கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஊராட்சி இளைஞரணி அமைப்பாளர், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். தற்போது கட்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார்.