வெளியூர்களுக்கு சென்ற 15 ஆயிரம் வாக்காளர்கள்

வால்பாறையில் இருந்து வெளியூர்களுக்கு சென்ற 15 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படுமா என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

Update: 2021-03-12 16:03 GMT
வால்பாறை,

வால்பாறை தொகுதியில் 1962-ம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அனைத்து வாக்காளர்களுமே வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் பணிபுரிந்து வந்தவர்கள். வால்பாறை பகுதியை பொறுத்தவரை முழுமையான வாக்கு பதிவு நடைபெற்று வந்தது.

ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக வால்பாறை பகுதியில் ஏற்பட்ட வனவிலங்குகள் தாக்குதல், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காத நிலை,  பள்ளி கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழியில்லாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால், வால்பாறை பகுதியில் இருந்து பல தொழிலாளர்கள் படிப்படியாக  அங்கிருந்து கிளம்பி பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பெயர்கள் வால்பாறை மலைப்பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.18 வயது நிரம்பிய உயர் கல்வி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பலரின் பெயர்களும் வால்பாறை மலைப்பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.  

இவர்களில் பலரும் தேர்தல் சமயத்தில் வாக்களிப்பதற்காக வால்பாறை மலைப்பகுதிக்கு வருவதில்லை. 

 இதனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, சட்டசபை  தேர்தலானாலும் சரி சராசரியாக கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேருக்கு மேல்  வாக்களிக்க வரவில்லை.

கொரோனா தொற்று காரணமாக இந்த சட்டசபை தேர்தலிலும் இந்த நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வால்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் மேல் பகுதியான வால்பாறை மலைப்பகுதியில் மட்டும் 59ஆயிரத்து 80 வாக்காளர்கள் உள்ளனர். 

இதில் 15 ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் வாக்களிக்க வரவில்லை  என்றால் வால்பாறை சட்டமன்ற தொகுதி என்ற பெயரில் உள்ள வால்பாறை பகுதி மக்களுக்கு அரசை பொறுத்தவரை உரிய உரிமையும் அங்கீகாரமும் இல்லாமல் போய்விடும் நிலை உருவாகும். 

எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் வால்பாறை மலைப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் எந்த ஊரில் இருந்தாலும் சரி, எந்த ஊர்களில் பணி செய்து கொண்டிருந்தாலும் சரி அல்லது எந்த கல்லூரியில் படித்து கொண்டு இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

குறிப்பாக. வால்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் திருப்பூர், பல்லடம், ஈரோடு போன்ற பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.  

இவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைப்பதற்கும் சிறப்பு தேர்தல் பஸ் வசதி செய்து கொடுப்பதற்கும் அல்லது இவர்களுக்கு திருப்பூர், பொள்ளாச்சி பகுதியிலேயே தாங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் வால்பாறை மலைப்பகுதியை சேர்ந்த வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற அக்கறையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க முன்வரவேண்டும். 
இதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்