அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கல்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-12 15:56 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அமைச்சர் வேட்புமனு தாக்கல்
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இதன்மூலம் திண்டுக்கல் தொகுதியில் அவர் 2-வது முறையாக மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கு நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்காக மதியம் 2.30 மணிக்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். நுழைவுவாயிலில் அவருடைய ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர், திண்டுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர் காசிசெல்வியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது சொத்து விவரத்தை சமர்ப்பிக்கவில்லை. வருகிற 15-ந்தேதி சொத்து விவரத்தை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அப்போது முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சிறுபான்மையினரின் காவலர் 
இதைத் தொடர்ந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. சிறப்பான ஆட்சியை வழங்கியது. கொரோனா காலத்தில் நிவாரணம், பொங்கல் பரிசு, விவசாயக்கடன், சுயஉதவிக்குழு கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி, 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு தலா ரூ.1,500 ஆகியவற்றால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இலவச திட்டங்களை அறிவிப்பதில் தி.மு.க. போன்று அ.தி.மு.க.ஏமாற்றாது என்பது மக்களுக்கு தெரியும். எனவே, மக்களின் ஆதரவுடன் 214 தொகுதிகளில் வெற்றிபெற்று தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க., சிறுபான்மையினருக்கு எதிரானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. அ.தி.மு.க. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் அ.தி.மு.க. செயல்பட்டது இல்லை. சிறுபான்மையினரின் காவலராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
திண்டுக்கல்லை பொறுத்தவரை திப்புசுல்தான் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.  கொரோனா காலத்தில் எனது சொந்த செலவில் சிறுபான்மையினருக்கு பல்வேறு உதவிகளை செய்தேன். மேலும் ஒன்றிய பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. இருந்த போது நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டு நீக்கப்பட்டு, தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே, திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை விட 3 மடங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்