வாக்காளர்களுக்கு தாம்பூலதட்டுடன் அழைப்பிதழ்

வருகிற 6-ந்தேதி வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு மேள, தாளத்துடன் அழைப்பிதழ் கொடுத்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

Update: 2021-03-12 15:25 GMT
பொள்ளாச்சி


வருகிற 6-ந்தேதி வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு மேள, தாளத்துடன் அழைப்பிதழ் கொடுத்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவு செய்ய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் வீடு, வீடாகவும், வணிக நிறுவனங்களுக்கு சென்று விழிப்புணர்வு நோட்டீசு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி தொகுதி வாக்காளர்கள் தவறாமல் 6-ந்தேதி வாக்களிக்க வலியுறுத்தி மேளம், நாதஸ்வரம் இசைக்க, தாம்பூல தட்டில் பழம் வைத்து வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்தனர். கடை வீதி, சத்திரம் வீதி, தெப்பக்குள வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 அப்போது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தணிகைவேல், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சுப்ரியா, வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது

100 சதவீத வாக்குப்பதிவு


வருகிற சட்டமன்ற தேர்தலில் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 

இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவு செய்ய வலியுறுத்தி சுப நிகழ்ச்சிகளுக்கு அச்சடிப்பது போன்று வாக்களிக்கும் சுப விழா என்ற தலைப்பில் பத்திரிக்கை அச்சடித்து வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

அதில் கொரோனா காரணமான தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, அனைவரும் முகக்கவசம் அணிந்து வாக்களிக்க வேண்டும். அன்பளிப்பு கொடுப்பதும், பெறுவதும் குற்றமாகும். 

அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

 பொள்ளாச்சி தொகுதி முழுவதும் அந்தந்த பகுதி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் பத்திரிக்கை கொடுத்து வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்