தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேர் வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல்நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல்நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் தொகுதிகளுக்கு அந்தந்த உதவி கலெக்டர் அலுவலகத்திலும், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிக்கு அந்தந்த தாலுகா அலுவலகத்திலும் வேட்பு மனுதாக்கல் நடந்தது. வேட்புமனு தாக்கலை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வேட்பாளர்கள் 100 மீட்டருக்குள் 2 கார்களில் வர அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதே போன்று மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வேட்பாளர்களுக்கு மனுதாக்கலின் போது உதவுவதற்காக தனியாக உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் 2 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு வேட்புமனு தாக்கலின் போது வைக்கப்பட வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து அனுப்பினர்.
மனுதாக்கல்
நேற்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கோவில்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் போலையா என்பவர் யுனிவர்சல் பிரதர்குட் மூவ்மெண்ட் அமைப்பு சார்பில் போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடம் மனு தாக்கல் செய்தார். அதே போன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கோவையை சேர்ந்த குமாரவேல் என்ற வேல்முருகன் என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வநாயகத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மற்ற தொகுதிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதே நேரத்தில் ஏராளமானவர்கள் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது.