கூடலூர் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
கூடலூர் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.;
கூடலூர்,
தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூடலூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கல்லீங்கரை, நம்பாலக்கோட்டை, செவிடிப்பேட்டை, நந்தட்டி உள்ளிட்ட சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
ஆனால் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால், முக்கிய கோவில்களில் தேர் மற்றும் பக்தர்கள் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கல்லிங்கரை சிவன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு முதல்கால பூஜையும், தொடர்ந்து விடிய, விடிய 4-ம் கால பூஜைகள் வரை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி நாளில் முக்கூர் பஜனை மடத்தில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக திருத்தேர் மற்றும் பக்தர்கள் ஊர்வலம் புறப்பட்டு கோவிலை வந்தடைவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருத்தேர் மற்றும் பக்தர்கள் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. இதேபோல் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள் இன்றி சிவராத்திரி விழா நடைபெற்றது.
இதேபோல் நம்பாலக்கோட்டை சிவன்மலையில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதனால் பக்தர்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் மாலை தொடங்கி நேற்று விடிய, விடிய சிவன் மற்றும் நந்தீஸ்வரருக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள், மலர்களால் சாமிக்கு லட்சார்ச்சனை உள்ளிட்ட விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. இதனால் பக்தர்கள் இன்றி சிவன்மலை வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் செவிடிப்பேட்டை சக்தி முனீஸ்வரர், நந்தட்டி சிவன் உள்ளிட்ட கோவில்களில் இரவு முழுவதும் மகா சிவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூடலூர் அருகே தேவர்சோலை சிவன் கோவில், ஓவேலி பேரூராட்சி பார்வுட் பசுவண்ணன் கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெற்றது ஆனால் திருத்தேர் ஊர்வலம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மகா சிவராத்திரி விழா களை இன்றி காணப்பட்டது.
கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் உள்ள கேதாரீஸ்வரர் சன்னதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு மற்றும் 108 சங்கு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு முதற்கால வழிபாடு, 11 மணிக்கு 2-ம் கால வழிபாடு, நள்ளிரவு 2 மணிக்கு 3-ம் கால வழிபாடு,
அதிகாலை 4 மணிக்கு 108 சங்கு சிறப்பு பூஜை, 5 மணிக்கு 4-ம் கால வழிபாடு ஆகியவை நடைபெற்றன. சக்தி மலை சிவன் கோவில், திம்பட்டி, கடக்கோடு மற்றும் கெட்சி கட்டி கிராமத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடியும், சிவபெருமானை வழிபட்டும் சென்றனர்.
கடைவீதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் 7-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஏராளமானோர் பங்கேற்ற கத்தி போடும் நடனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.