குன்னூரில் சேற்றில் சிக்கி தவித்த அக்காள்-தம்பி மீட்பு
குன்னூரில் சேற்றில் சிக்கி தவித்த அக்காள்-தம்பியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.;
குன்னூர்,
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. அப்போது குன்னூர் அருகே சந்திரா காலனியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீரோடு கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடியது.
மேலும் அருகில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக எலிசபெத்(வயது 45) என்பவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் எலிசபெத் மற்றும் அவரது தம்பி ராபர்ட்(42) ஆகியோர் வெளியே வர முடியாமல், அதன் சேற்றில் தவித்தனர்.
இதுகுறித்து குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள், வீட்டுக்கு சிக்கி இருந்த அவர்கள் 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். தண்ணீர் அதிகளவில் புகுந்ததால், வீட்டுக்குள் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.