ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே 8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்டுசாலையில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செங்கல்பட்டு நகரத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த 2 வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர் அந்த வாகனத்தில் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பணம் இருந்த 2 வாகனங்களையும் செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து அதில் இருந்த ரூ.1 கோடியே 8 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் செங்கல்பட்டில் ரூ.1 கோடியே 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், அம்பத்தூர் மற்றும் ஆவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு வந்த ரூ.44 லட்சம், எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சுங்க இலாகா அதிகாரிகளை ஏற்றிச்சென்ற காரின் டிக்கியில் இருந்த ரூ.3.20 லட்சம், அம்பத்தூரில் புதிய கார் வாங்க தம்பதிகள் கொண்டு சென்ற பணம் என மொத்தம் ரூ.53 லட்சத்து 25 ஆயிரத்து 600-ஐ தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரசு கருவூலகங்களில் ஒப்படைத்தனர்.