நடைபயிற்சி சென்றபோது கணவன்-மனைவியை தாக்கி நகை பறிப்பு - மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
சென்னை தியாகராயநகரில் நடைபயிற்சி சென்றபோது கணவன்-மனைவியை தாக்கி நகை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சென்னை,
சென்னை தியாகராயநகர் திருமலைபிள்ளை சாலை பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58). இவருடைய மனைவி பாரதி (56). கணவன்-மனைவி இருவரும் நேற்று காலை தங்களது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், பாரதியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட சோமசுந்தரத்தையும் கத்தியால் லேசாக வெட்டிவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். கத்தியால் வெட்டப்பட்ட சோமசுந்தரம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.