கோவை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூனை மாவட்ட கலெக்டர் ராஜாமணி பறக்கவிட்டு விழிப்புணர்வு

கோவை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூனை மாவட்ட கலெக்டர் ராஜாமணி பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2021-03-12 06:07 GMT
கோவை,

சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில் கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு ராட்சதபலூன் பறக்க விடப்பட்டது. பின்னர் கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சட்ட சபை தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி 14-ந் தேதியும், 2-ம் கட்ட பயிற்சி 26-ந் தேதியும் நடைபெறுகிறது. 

மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. கிருமி நாசனி மற்றும் கையுறைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட 64 ஆயிரத்து 650 பேரில் விருப்பம் உள்ளவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான கோவை மாநகர பகுதிகளில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

10 சட்டசபை தொகுதிகளில் 120 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆர்.எஸ். புரத்தில் ஒரு அதிகாரி வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். இந்த கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்