வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மகாசிவராத்திரி விழா

வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-03-12 06:00 GMT
பேரூர்,

தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் கோவை வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் ஆண்டு தோறும் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த ஆண்டு வெள்ளிங்கிரி ஆண்டவர் உடனவர் மனோன்மணி அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.

 ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்ற போதிலும் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால் அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசித்தனர். 

மேலும் அங்கு நடந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் மகா சிவராத்திரியையொட்டி வெள்ளிங்கிரி 7-வது மலையில் சுயம்புவாக தோன்றியுள்ள கிரிமலை ஆண்டவரை தரிசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் மலை ஏறுவார்கள். 

இதற்காக ஏராளமானவர்கள் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் மூங்கில் தடிகளுடன் நேற்று மாலையில் காத்திருந்தனர். வெள்ளிங்கிரி மலை நெடுகிலும் பக்தர்களின் வசதிக்காக ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க செல்லும் 7 மலையும் செங்குத்தாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் மூங்கில் கம்பு ஊன்றி தான் மேலே ஏற முடியும். இதே போல இறங்கும் போதும் கம்பின் உதவியுடன் தான் இறங்க முடியும். மூங்கில் கம்பின் தேவை அதிகமாக இருந்ததால் ஒரு கம்பு ரூ.30-க்கு விற்கப்பட்டது.

மேலும் செய்திகள்