கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-12 05:26 GMT
கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் குன்னத்தூர்-ஊராட்சி தச்சூர் கிராமம் அருகே கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் வெடிவைத்து பாறைகளைத் தகர்த்து வருகின்றனர். இதனால் அருகில் உள்ள குன்னத்தூர், தச்சூர், சீவாடி, பேக்கரணை, நீலமங்கலம் கீழபட்டு, வீராண குன்னம் உள்பட்ட கிராம மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிின்றனர். எனவே இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

எந்த நடவடிக்கையும் இல்லாததால் நேற்று காலை 9 மணியளவில் தச்சூர் கூட் ரோட்டில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கூடினர். திடீரென கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரியும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் உள்பட போலீசார் விரைந்து வந்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இங்குள்ள கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு உள்ளவர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிறது எனவும் தெரிவித்தனர்.

உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்