மகா சிவராத்திரி விழா சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-03-12 04:55 GMT
காஞ்சீபுரம்,

மகா சிவராத்திரி விழாவையொட்டி காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 1008 சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவருக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், அமரேஸ்வரர் கோவில், வழக்கறுத்தீஸ்வரர் கோவில், மணிகண்டீஸ்வரர் கோவில், புண்ணிய கோட்டீஸ்வரர், முத்தீஸ்வரர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் ஆத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு மகா சிவராத்திரியையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதுபோல ஆலாப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வேண்பாக்கம் கிராமத்தில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதனையடுத்து பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் பக்தி பாடல்களும் நடைபெற்றன. ஆத்தூர் முக்தீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிப்பாட்டில் பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

மேலும் செய்திகள்