முந்தைய பா.ஜனதா அரசு அன்வய் நாயக் தற்கொலை வழக்கை மூடி மறைத்தது குறித்து விசாரணை மகள், மனைவி வலியுறுத்தல்
ரிபப்ளிக் டி.வி.யின் அர்னாப் கோஷ்வாமி தொடர்புடைய அன்வய் நாயக் தற்கொலை வழக்கை முந்தைய பா.ஜனதா அரசு மூடி மறைத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மகள், மனைவி வலியுறுத்தினர்.
மும்பை,
மும்பையில் உள்ள ரிபப்ளிக் டி.வி.யின் தலைமை அலுவலகத்தில் உள்கட்டமைப்பு பணிகளை அன்வய் நாயக் என்பவர் செய்திருந்தார். இந்தப் பணிகளுக்காக அன்வய் நாயக்கிற்கு கொடுக்க வேண்டிய பெரும் தொகை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு அன்வய் நாயக் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் அர்னாப் கோஸ்வாமியின் பெயரையும் எழுதி வைத்திருந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் அர்னாப் கோஷ்வாமி உள்பட 3 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் அன்வய் நாயக்கின் மகள் அதன்யா மற்றும் அவரது மனைவி அக்ஷதா ஆகியோர் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
முந்தைய பா.ஜனதா தலைமையிலான மாநில அரசு எனது தந்தையின் தற்கொலை வழக்கை மூடிமறைக்க 100 சதவீதம் முயற்சி செய்தது.
இந்த வழக்கில் அப்போது இருந்து விசாரணை அதிகாரி வழக்கு நிறைவு படிவத்தில் என்னிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்க முயற்சி செய்தார்.
இது யாருடைய அறிவுறுத்தலின் பேரில் நடந்தது? போலீசார் விசாரணை செய்து இதற்கு பின்னால் இருக்கும் அனைவரையும் வெளிக்கொண்டுவர வேண்டும். வழக்கை மூடி மறைத்த முந்தைய அரசிடம் முழுமையான விசாரணை நடத்தவேண்டும்.
ஒரு சிலருக்கு இரண்டு நாட்களுக்குள் நீதி கிடைக்கிறது. ஆனால் எனது தந்தை வழக்கில் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் சாட்சியாக உள்ளது. ஆனாலும் எப்போது எங்களுக்கு நீதி கிடைக்கும்? நீங்கள் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தால் மட்டுமே உங்களுக்கு நீதி கிடைக்குமா?
இவ்வாறு அவர் கூறினார்.