சத்தி, கோபி பகுதியில் வாகன சோதனை: வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்
சத்தி, கோபி பகுதியில் நடந்த வாகன சோதனையில் வியாபாாி உள்பட 2போிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் அடிவாரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். அதில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கேரள மாநிலத்தை சேர்ந்த துஷ்ஷார் (வயது 50) என்பதும், இஞ்சி வியாபாரியான இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு வியாபாரம் செய்வதற்காக பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதைத்தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு பவானிசாகர் தொகுதி தேர்தல் உதவி அலுவலர் ரவிசங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட வேலுமணிநகா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் கோபி கச்சோிமேடு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பதும், அவர் உாிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. பின்னர் அந்த பணம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சத்தியமங்கலம், கோபி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.