திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 சட்டமன்ற தொகுதிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (12-ந் தேதி) தொடங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி, மன்னச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிற்பகல் 3 மணிவரை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
மனு தாக்கல் செய்யும் இடங்கள்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புவோர் திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணனிடமும், திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகமான திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட வருவாய் அதிகாரி விசுவநாதனிடமும், திருச்சி மேற்கு தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான தாசில்தார் ரமேஷிடமும் மனு தாக்கல் செய்யலாம்.
இதேபோல ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு திருச்சி -திண்டுக்கல் சாலை வண்ணாங்கோவில் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி உதவி கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவிடமும், ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மகேந்திரனிடமும் மனு தாக்கல் செய்யலாம். முசிறி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை முசிறி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் ஜோதி சர்மாவிடமும், முசிறி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திராவிடமும் மனுக்களை தாக்கல் செய்யலாம்.
லால்குடி
லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதனிடமும் மற்றும் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சித்ராவிடமும் மனு தாக்கல் செய்யலாம். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட வழங்கல் அதிகாரி அன்பழகன், மணப்பாறை தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி வைத்தியநாதனிடமும், துறையூர் தொகுதிக்கு துறையூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சிறப்பு துணை கலெக்டர் முத்து வடிவேலிடமும், மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி கலால் பிரிவு உதவி ஆணையர் ராமனிடமும் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறியீடு வரையப்பட்டது
வேட்பு மனுக்கள் பெறப்படும் அலுவலகங்களில் 100 மீட்டர் தூரத்திற்கும், 200 மீட்டர் தூரத்திற்கும் குறியீடு வரையப்பட்டுள்ளது.இந்த குறியீட்டை தாண்டி கட்சியினர் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதி உண்டு என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.