வன்னியர் சங்கத்தில் இருந்து மாநில நிர்வாகி விலகல்
ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, வன்னியர் சங்கத்தில் இருந்து மாநில நிர்வாகி விலகினார். மேலும் காடுவெட்டி குருவின் மனைவியை சுயேச்சை வேட்பாளராக களமிறக்க முடிவு செய்துள்ளனர்.
ஆண்டிமடம்:
பதவி விலகல்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் வைத்தி. இவர் வன்னியர் சங்க மாநில துணை செயலாளராக இருந்து வந்தார். மேலும் இவர், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவதற்காக பா.ம.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார். அவர், தனக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளராக பா.ம.க. தலைமை வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வைத்தி, நேற்று முன்தினம் இரவு முகநூல் பக்கத்தில் வன்னியர் சங்க மாநில துணை செயலாளர் பதவி மற்றும் பா.ம.க.வில் இருந்து விலகுவதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவதாவது;-
உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை
பதவியில் இருந்து விலகியது நேற்று எடுத்த திடீர் முடிவு அல்ல. என்னுடைய வழிகாட்டியான காடுவெட்டி குரு இறந்தபோது எடுத்திருக்க வேண்டிய முடிவு. தாமதமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசுக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கட்சியில் பணியாற்றி வந்தோம். குருவின் பெயரைக் கூறி தொடர்ந்து பல அவமானங்களையும், இன்னல்களையும் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் கொடுத்து வந்தாலும் தொடர்ந்து கட்சிப்பணியாற்றினோம். கட்சிக்காக உழைத்த பலர் இருக்கின்றனர்.
கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதாவையோ அல்லது எங்களையோ வேட்பாளராக அறிவித்திருக்கலாம். ஆனால் கட்சி தொண்டர்களை பார்க்காத, தொண்டர்களின் சுக துக்கங்களில் பங்கேற்காத ஒருவரை வேட்பாளராக அறிவித்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த இயக்கத்தில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. பா.ம.க.வில் மகா நடிகனாக இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். குருவிடம் அரசியல் கற்றவர்களுக்கு நடிக்க, ஏமாற்ற தெரியாது. தற்போது எந்த ஒரு கட்சியிலும் இணையவோ, தனிக்கட்சி தொடங்கவோ முடிவு இல்லை. குருவின் ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து பேசி நாளைக்குள் (இன்று) முடிவு அறிவிக்கப்படும். கட்சி மேலிடத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டார்கள். நான் பேசவில்லை. தமிழகம் முழுவதிலும் இருந்து அதிருப்தியாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். நான் யாருக்கும் முடிவு கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
குருவின் மனைவியை...
இதைத்தொடர்ந்து ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்தி, அவருடைய ஆதரவாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது ஆதரவை வைத்திக்கு தெரிவித்தனர்.
கூட்டத்தின் முடிவில், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் மனைவி சொர்ணலதாவை சுயேச்சை வேட்பாளராக களமிறக்கி, அவரை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறச்செய்ய கடுமையாக உழைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.