சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கப்பட இருப்பதால், சப்-கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அரியலூர்:
இன்று தொடக்கம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிப்பு, பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றம், விளம்பர பதாகைகள் அகற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதன்படி பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்பு மனுக்களை இன்று முதல் தாக்கல் செய்யலாம். வருகிற 19-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.
வேட்புமனு அளிக்கலாம்
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஏழுமலையிடம், வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இங்கு வேட்பாளர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து, கோட்டாட்சியர் அமர்நாத்திடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.
மேலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வருபவர்கள் 100 மீட்டருக்கு முன்னதாகவே தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டுள்ளது. அந்த இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக இரும்பு தடுப்புகளை அமைத்தனர். வேட்புமனுவினை வேட்பாளரோ அல்லது அவரை முன் மொழிபவர்கள் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு பெறப்படும் அலுவலகம் 100 மீட்டர் சுற்றளவிற்கு அதிகபட்சமாக 2 வாகனம் மட்டுமே வர வேண்டும். வேட்புமனு தாக்கலின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஊர்வலமாக வரக்கூடாது. முக கவசம் அணிய வேண்டும். மேலும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே, வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 13, 14-ந்தேதி விடுமுறை நாட்கள் ஆகும். அன்றைய தினங்களில் வேட்பு மனுக்கள் வாங்கப்படாது.
19-ந் தேதி கடைசி நாள்
தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் வைப்பு (டெபாசிட்) தொகையாக பொதுப்பிரிவினர் ரூ.10 ஆயிரமும், தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் பிரிவினை சேர்ந்தவர்கள் (சாதி சான்றிதழுடன்) ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 19-ந்தேதி ஆகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 20-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறவேண்டிய கடைசி நாள் 22-ந்தேதி ஆகும். மேலும் அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதியும் நடைபெறவுள்ளது.