தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு சென்ற ரூ.54 லட்சம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு சென்ற ரூ.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கூறினார்.

Update: 2021-03-11 20:36 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு சென்ற ரூ.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கூறினார்.
கண்காணிப்பு
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியள்ளதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் கடந்த 26-ந்தேதி மாலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதையொட்டி அன்று முதல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் நான்கு சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று பறக்கும் படைக்குழுவும், தலா மூன்று நிலையான கண்காணிப்புக்குழுவும் மற்றும் தலா ஒரு வீடியோ பதிவு மற்றும் மதிப்பீட்டுக்குழு என 8 மணி நேரம் கண்காணிப்புப்பணி மேற்கொள்ளும் வகையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
தேர்தல் பணி மேற்கொள்ளும் அலுவலர்களின் வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் புகார் குறித்த தகவலுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.54 லட்சம் பறிமுதல்
நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நாள் முதல் நேற்று வரை சிவகங்கை மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு மூலம் மேற்கொண்ட வாகனச்சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.54 லட்சத்து 4 ஆயிரத்து 180 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.27 ஆயிரத்து 320 மதிப்பீட்டில் உள்ள மதுப்பாட்டில்கள் வாகனத்தணிக்கையின் போது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உரிய ஆவணம் இன்றி வாகனத்தில் ஏற்றிச் சென்ற ரூ.12 லட்சத்து 16 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்க நகைகள்
 இதுதவிர ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 948 மதிப்பீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா வகைப்பொருட்கள், சிகரெட் போன்றவை கொண்டு செல்லப்பட்டதை வாகனத்தணிக்கையின் போது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 410 மதிப்பீட்டில் தங்க நகைகள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதை வாகனத்தணிக்கையின் போது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.19 லட்சத்து 98 ஆயிரத்து 478 மதிப்பீட்டில் பொருட்களாகவும் மற்றும் ரொக்கப் பணமாக ரூ.54 லட்சத்து 4 ஆயிரத்து 180 கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு படை தீவிரமாக மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்