சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
மதுரை
மகா சிவராத்திரியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
மகா சிவராத்திரி விழா
மகா சிவராத்திரி விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. அதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நேற்று நள்ளிரவு முதல் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக ஆராதனைகளுடன் விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு மீனாட்சி அம்மனுக்கு முதல் கால அபிஷேகம் இரவு 10 மணி தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால அபிஷேகம் 11 மணி முதல் 11.45 வரையிலும், 3-வது காலம் 12 மணி முதல் 12.45 வரையிலும், 4-வது காலம் 1 மணி முதல் 1.45 மணி வரையிலும் நடந்தது.
மேலும் சுந்தரேசுவரர் சுவாமிக்கு முதல் கால அபிஷேகம் இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-வது காலம் 12 மணி முதல் 12.45 வரையிலும், 3-வது காலம் 1 மணியில் இருந்து 1.45 மணி வரையிலும், 4-வது காலம் 2 மணி முதல் 2.45 மணி வரையிலும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதைெதாடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாமம் பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடந்தது.
அமர்வு தரிசனம் ரத்து
இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்துள்ள சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசிவீதி தென்திருவாலவாய திருக்கோவில், திருவாதவூர் திருமறை நாதர் சாமி கோவில், ஆமூர் அய்யம்பொழில்ஈஸ்வரர் கோவிலில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடந்தன.
மேலும் கொரோனா தொற்று காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்துள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி சன்னதி அர்த்த மண்டபத்தில் அபிஷேக நேரத்தில் பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்யும் முறை (அமர்வு தரிசனம்) ரத்து செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இம்மையில் நன்மை தருவார் கோவில்
மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு மேல் சிறப்பு யாக சாலை பூஜை நடந்தது. அதைதொடர்ந்து இரவு 10 மணிக்கு சாமிக்கு முதல் கால பூஜையில் சங்காபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களுடன் இரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 2 - மணிக்கு 3 கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடந்தது. மேலும் 1008 சங்காபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது.
முக்தீஸ்வரர் கோவில்
மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை கோவிலின் கருவறைக்கு எதிரிலுள்ள 3 துவாரங்கள் வழியே சூரிய கதிர்கள் சென்று மூலவரை தழுவி செல்லும் நிகழ்வு, காலை 6.35 மணி முதல் 6.45 மணி வரையிலும், பின்னர் 7 மணி முதல் 7.10 மணி வரை, தலா பத்து நிமிடங்கள் சூரிய கதிர்கள் மூலவரை தழுவி செல்லும். இந்த அரிய நிகழ்வு நேற்று தொடங்கியது. சிவராத்திரி நாளான நேற்று காலையில் நடைதிறக்கவும் முதலாவதாக சூரியகதிர்கள் சென்று முக்தீஸ்வரரை வழிபட்டது.
இதையடுத்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு பக்தர்கள் சூரிய வழிபாட்டை தரிசிக்க அனுமதிக்கவில்லை. காலை 7.15 மணிக்கு பிறகு வெளியே காத்திருந்த பக்தர்கள் சமூக இடைவேளி விட்டு ஒருவர் பின் ஒருவராக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதே நிகழ்வு இந்தாண்டு செப்டம்பர் மாதம் 19-ம்தேதி தொடங்கி 30-ம் தேதியும் காலையில் நடைபெறும். ஆண்டுக்கு 2 முறை இந்த நிகழ்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.