சேரன்மாதேவியில் தற்காலிக ரெயில்வே கேட் மூடல் பொதுமக்கள் போராட்டம்

சேரன்மாதேவியில் தற்காலிக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-03-11 19:44 GMT
சேரன்மாதேவி:

சேரன்மாதேவி ராமசாமி கோவில் அருகே வடக்கு நாலாந்தெரு, தெற்கு நாலாந்தெரு மற்றும் அம்மநாதன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன.

இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது. இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் ஊற்று இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தற்காலிக ரெயில்வே கேட் வழியாக சென்று வந்தனர். 

இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகத்தினர் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி தற்காலிக ரெயில்வே கேட்டை மூடி பராமரிப்பு பணியில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் மூலமாக தீர்வு காணும்படி கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்