குமரியில் 80 வயதுக்கு மேற்பட்ட 28 ஆயிரம் பேருக்கு தபால் ஓட்டு
குமரியில் 80 வயதுக்கு மேற்பட்ட 28 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரியில் 80 வயதுக்கு மேற்பட்ட 28 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட உள்ளனர்.
தபால் ஓட்டு
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஆகியவை ஒன்றாக நடக்கிறது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க தபால் ஓட்டு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
28 ஆயிரம் பேர்
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 28 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்காக தபால் ஓட்டு படிவங்களை வினியோகம் செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வீடு வீடாக சென்று படிவத்தை தேர்தல் அலுவலர்கள் வழங்கி வருகிறார்கள். அப்போது படிவத்தை பூர்த்தி செய்வது தொடர்பாகவும் விளக்கம் அளித்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 16-ந்தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.