விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கக்கோரி போராட்டம்
கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கக்கோரி அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பா.ம.க. வேட்பாளாரக கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டார். இது கலைச்செல்வன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் விருத்தாசலம் பாலக்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், விருதாச்சலம் சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் எனவும், மீண்டும் கலைச்செல்வனை விருத்தாசலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கக்கோரியும் கோஷமிட்டனர்.
கடும் வாக்குவாதம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்கள். அப்போது கலைச்செல்வன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, ஒருவரையொருவர் நெட்டி தள்ளிக் கொண்டனர். அந்த சமயத்தில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் ஒருவர் அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி சாலையில் அமர்ந்தார். இதைபார்த்த போலீசார், அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.