தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க ஏற்பாடு
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். நமது வாக்கு, நமது உரிமை. மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்து உள்ளது. அதன்படி படிவம் 12டி பூர்த்தி செய்து கொடுத்து தபால் ஓட்டு பெறலாம். மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்களிக்கும்போது நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் எந்திரம் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது என்பது குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு சானிடைசர், முககவசம், வாக்களிக்கும்போது கையுறைகள் வழங்கப்படும். வருகிற 15-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடக்கிறது’ என்றார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) சதீஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.