தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

Update: 2021-03-11 17:16 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 

வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர 19-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. மனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. 

இதற்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், விளாத்திகுளம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் அபுல்காசிம், கோவில்பட்டி தொகுதிக்கு உதவி கலெக்டர் சங்கரநாராயணன், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜீவரேகா, திருச்செந்தூர் தொகுதிக்கு உதவி கலெக்டர் தனப்பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டிக்கு அந்தந்த உதவி கலெக்டர் அலுவலகங்களிலும், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளத்துக்கு அந்தந்த தாலுகா அலுவலகங்களிலும் வேட்புமனுக்களை பெறுகின்றனர்.

ஏற்பாடுகள் தயார்

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மனுதாக்கல் நடைபெறும் அலுவலகங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கூட்ட நெரிசலை தடுப்பதற்காக பாதுகாப்பு கருதி சில இடங்களில் கம்புகளை கொண்டு தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 100 மீட்டருக்கு பிறகு 2 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். 

வேட்புமனு தாக்கல் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குவதால், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுமார் 50 வேட்புமனுக்கள் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறத்திலான வேட்புமனுவில் வேட்பாளர்கள் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன்

மேலும் ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆன்லைனில் வேட்பாளர் விருப்பப்படும் தேதி, நேரத்தை குறிப்பிட்டு பதிவு செய்யலாம். அந்த தேதியில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நகலை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரிலும் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்கும்போது எந்த திருத்தமும் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்