தாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தொழிலாளி

சின்னமனூர் அருகே தாயை அடித்து கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-03-11 16:41 GMT

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். 
இவரது மனைவி பால்தாய் (வயது 59). இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. பால்தாய் மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவரது இளைய மகன் பாலசந்தர் (30). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால்தாயை கம்பத்துக்கு அழைத்து சென்றார். 
பின்னர் அவர் பால்தாயின் பெயரில் உள்ள  வீட்டை அங்குள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கினார். 
இந்த தகவலை பால்தாய் மற்ற மகன்களிடம் கூறியதாக தெரிகிறது. 

அடித்து கொலை

இதையடுத்து பாலசந்தர், வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியதை அண்ணன்களிடம் ஏன் கூறினாய?் என்று நேற்று இரவு தாயிடம் தகராறு செய்தார். 
அப்போது ஆத்திரமடைந்த பாலசந்தர் திடீரென அங்கு கிடந்த இரும்புகம்பியால் பால்தாயின் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த பால்தாய் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்திலேயே பால்தாய் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசந்தரை வலைவீசி தேடி வருகின்றனர். 


மேலும் செய்திகள்