கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ.வுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு பல்லடத்தில் அ.தி.மு.க.வினர் 2-வது நாளாக சாலை மறியல்

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-11 16:22 GMT
பொங்கலூர்
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் அதிருப்தி
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருக்கும் கரைப்புதூர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் பல்லடம் பஸ் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
2-வது நாளாக மறியல்
இந்த நிலையில் நேற்றுகாலை மீண்டும் 2-வது நாளாக எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள்  200-க்கும் மேற்பட்டவர்கள் பல்லடத்தில் ஒன்று திரண்டனர். அவர்கள் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ்நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் அவர்களை சாலையின் ஓரமாக அமரவைத்தனர். 
அப்போது அவர்கள் பல்லடம் தொகுதியில் மீண்டும் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் 20 நிமிடம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்