சிவராத்திரியையொட்டி திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 68 சிறப்பு பஸ்கள் பயணிகள் கூட்டம் அலைமோதல்

சிவராத்திரியையொட்டி திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 68 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2021-03-11 15:46 GMT
திருப்பூர்
சிவராத்திரியையொட்டி திருப்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 68 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
68 சிறப்பு பஸ்கள் 
திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கு வேலை செய்து வருகிற தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளம் என்பதால், திருப்பூரில் எப்போதும் வெளிமாவட்ட பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக சனிக்கிழமை தொழிலாளர்களுக்கு சம்பள நாள் என்பதால், சொந்த ஊர்களுக்கு பலர் செல்வார்கள்.
இதுபோல் விஷேச மற்றும் பண்டிகை நாட்களில் பஸ்களில் பலர் பயணம் செய்வது வழக்கம். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு அதிகளவு இயக்கப்படும். இந்நிலையில் நேற்று சிவராத்திரி என்பதால் திருப்பூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 68 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அலைமோதிய கூட்டம் 
இந்த பஸ்கள் அனைத்தும் திருப்பூர் கோவில்வழியில் இருந்து தென்மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் நேற்று காலை முதல் மாலை வரை பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையங்களுக்கு முன்பே நின்று கொண்டு ஓடிச் சென்று பலரும் இடம் பிடித்தனர்.
இருப்பினும் எதிர்பாராத அளவு கூட்டம் அதிகமாக இருந்ததால் தொழிலாளர்கள் நீண்ட நேரம் காத்து நின்று, சொந்த ஊர்களுக்குசென்றனர். இதனால் விசேஷ நாட்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்