நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் 4168 பேர் நியமனம்
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட வாக்குச்சாவடி அலுவலர்கள் 4 ஆயிரத்து 168 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி வழங்குவது, ஓட்டு போட கையுறை வழங்குவது, காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வாக்குச்சாவடி அலுவலர்களை சுழற்சி முறையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி, ஊட்டி கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்து, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.
ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் என்ற விகிதத்தில் 3 ஆயிரத்து 472 அலுவலர்கள் மற்றும் கூடுதலாக 20 சதவீதம் என 696 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 168 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலர்களை 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊட்டி ரெக்ஸ் உயர்நிலைப்பள்ளி, கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு தேவர்சோலை மானிங்ஸ்டார் உயர்நிலைப்பள்ளி,
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு குன்னூர் ஜோசப் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், தேர்தல் தனி தாசில்தார் புஷ்பாதேவி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.