4 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

Update: 2021-03-11 14:35 GMT
தேனி:

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
 மனு தாக்கல் செய்ய வருகிற 19-ந்தேதி கடைசி நாள்.
தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனி இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. 
அதன்படி ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் பெறப்படுகிறது. 
பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம், போடி சட்டமன்ற தொகுதிக்கு போடி தாலுகா அலுவலகம், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெறுகின்றனர். 
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்.
வீடியோ பதிவு
இதற்காக வேட்பு மனுக்கள் பெறும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 
வேட்பு மனு தாக்கலுக்கு வரும் வேட்பாளர்கள் 100 மீட்டர் சுற்றளவுக்குள், 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்பாளர் மற்றும் அவருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

எனவே 100 மீட்டர் தூர எல்லையை குறிப்பிடும் வகையில் 4 தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும் சாலையில் 100 மீட்டர் என்று எழுதப்பட்டு உள்ளது. 
மேலும், இங்கு இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன. 
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுக்கிறார்களா? விதிமீறல் நடக்கிறதா? என்பதை வீடியோ கண்காணிப்பு குழுவினர் கண்காணித்து அவற்றை வீடியோவில் பதிவு செய்யும் பணியிலும் ஈடுபட உள்ளனர்.


மேலும் செய்திகள்