தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவன்அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவன்அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர்
கணினி முறையில் தேர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுப்படும் 6,580 வாக்குசாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள கணினி முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
அப்போது கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-
தேர்தல் பயிற்சி வகுப்பு
வாணியம்பாடி தொகுதியில் 1,539 அலுவலர்களுக்கு இசுலாமியா ஆண்கள் கலைக்கல்லூரியிலும், ஆம்பூர் தொகுயில் 1,198 அலுவலர்களுக்கு இந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜோலார்பேட்டை தொகுதியில் 1,029 அலுவலர்களுக்கு நாடட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் தொகுதியில் 2,964 அலுவலர்களுக்கு தூய நெஞ்ச கல்லூரியிலும் வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 1,371 வாக்குசாவடி மையங்களில் 6,580 வாக்குச் சாவடி அலுவலர்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பணியாற்ற கடமைப்பட்டுள்ளனர். வாக்குசாவடி அலுவலர்களில் கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது. மற்ற அனைவரும் கட்டாயமாக தேர்தல் பணியில் பணியாற்றிட வேண்டும்.
நடவடிக்கை
மருத்துவ காரணங்களுக்காக விலக்கு கோரும் பட்சத்தில் அரசு மருத்துவ குழுவின் நேரடி விசாரணை மூலம் பரிசீலிக்கப்படும். உரிய காரணங்கள் இன்றி தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத வாக்குசாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தேர்தல் பயிற்சி வகுப்பில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.