கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகே திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில், குற்ற வழக்குகளில் கோயம்பேடு போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இவ்வாறு வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட கார் ஒன்று அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் தீயில் எரிந்து நாசமானது.
எனினும் தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் காரில் எரிந்த தீயை அணைத்து விட்டதால் அருகில் இருந்த போலீஸ் நிலையம் மற்றும் பெட்ரோல் நிலையத்துக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த காருக்கு மர்மநபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.