போலி கால் சென்டர் நடத்தி மோசடி பெண் உள்பட 2 பேர் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-03-11 07:47 GMT
ஆலந்தூர், 

சென்னை வேளச்சேரி செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் புருசோத்தமன். இவர், சென்னை அடையாறு சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொன்னார். நானும் கடன் தேவைப்படுவதாக சொன்னேன். செல்போனில் பேசிய நபர், ஏதோ தேவை என்று சொல்லி ரூ.10 ஆயிரம் வரை என்னிடமிருந்து பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். அது பற்றி நான் விசாரித்தபோது, மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் இதுபோல கடன் தருவதாக சொல்லி ஏமாற்றுவதாக தெரிய வந்தது. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் போலியாக கால்சென்டர் ஒன்றை நடத்தி, அதில் சிலரை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் மூலம் பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு, கடன் வாங்கி தருவதாக கூறி, கடன் வாங்கிக்கொடுக்காமல் இதுபோல் பண மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது.

போலி கால்சென்டரை நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்த சண்முகப்பிரியா (வயது 24), செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும், இதுபோல போலியான கால்சென்டரில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து, மோசடி லீலைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்