பாகிஸ்தான் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் கவுரவிப்பு

இந்தியா-பாகிஸ்தான் போரில் 50-ம் ஆண்டு வெற்றி விழாவை முன்னிட்டு அந்த போரில் பங்கேற்ற வீரர்கள் 150 பேர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.

Update: 2021-03-11 07:19 GMT
கோவை,

இந்தியா-பாக்கிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு போர் ஏற்பட்டது. இந்த போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 90 ஆயிரம் பேர் இந்தியா ராணுவத்திடம் சரண் அடைந்தனர். 

இந்த வெற்றியின் பொன்விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி 4 வெற்றி ஜோதிகளை ஏற்றி வைத்தார்.

இந்த வெற்றி ஜோதிகள் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுவதுடன், அந்த போரில் பங்கேற்று பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட்ட வீரர்களின் கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. 

மேலும் அந்த கிராமங்களில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, தேசிய போர் நினைவிடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பொன்விழாவின் ஒருபகுதியாக கடந்த 6-ந் தேதி இந்த வெற்றி ஜோதி கோவை ரெட்பீல்டில் உள்ள 110-வது பட்டாலியன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை முப்படைகளை சேர்ந்த வீரர்கள் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி மைதானத்தில் 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் கேரளாவை சேர்ந்த 150 வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், கமோடர் அசோக் ராய், ஏர் கமோடர் ராஜ்னிஸ் வர்மா, என்.சி.சி. குரூப் கமாண்டர் சந்திரசேகரன் நாயுடு, 191 பீல்டு ரெஜிமெண்ட் கர்னல் பியூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) கோவை அரசு கலைக்கல்லூரியில் தேசிய மாணவர் படையினருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிளும், 14-ந் தேதி கோவை ரேஸ்கோர்சில் மினி மராத்தான் போட்டியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்