நீச்சல் தெரியாததால் பரிதாபம் புழல் ஏரியில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பலி

புழல் ஏரியில் குளித்தபோது, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2021-03-11 07:15 GMT
செங்குன்றம், 

சென்னையை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மகன் ரூபன் (வயது 7). இவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலை ரூபன், தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றான். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் ரூபனை காணவில்லை.

இந்த நிலையில் மாயமான மாணவன் ரூபன், நேற்று காலை புழல் ஏரியில் பிணமாக மிதந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த புழல் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஏரியில் மிதந்த மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ரூபன், தனது வீட்டில் இருந்து சைக்கிளில் நேராக புழல் ஏரிக்கு சென்று குளித்து உள்ளார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்ற ரூபன், நீரில் மூழ்கி பலியானது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்