போலீஸ் வாகன சோதனையில் ஆட்டோவில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை சிக்கியது
போலீஸ் வாகன சோதனையில் ஆட்டோவில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை சிக்கியது. உரிய ஆவணங்கள் இருந்ததால் அவற்றை கொண்டு செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதித்தனர்.
பூந்தமல்லி,
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்காமல் இருப்பதை தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் இருந்த 2 பேரிடம் சோதனை செய்தபோது, சுமார் 12 கிலோ தங்க நகை இருப்பது தெரிந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர், ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள பிரபல நகை கடை ஒன்றின் ஊழியர்களான சந்திர பிரகாஷ் மற்றும் சரவணன் என்பதும், நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகை கடையில் இருந்து தங்கள் கடையில் 12 கிலோ தங்க நகையை ஆர்டர் செய்து இருந்தனர். இதற்காக நகையை ஆட்டோவில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றபிறகு, தங்க நகை ஆர்டர் ரத்து செய்யப்பட்டது.
இதனால் 12 கிலோ தங்க நகைகளை மீண்டும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் சவுகார்பேட்டைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். அதற்குரிய ஆவணங்களும் அவர்களிடம் இருந்தது. இதனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல மணிநேர சோதனைக்கு பிறகு 12 கிலோ தங்க நகைகளுடன் ஊழியர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர்.