தலைமை செயலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற வக்கீல்கள் கைதாகி விடுதலை
சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஆன்-லைன் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று ஐகோர்ட்டு கடந்த 6-ந் தேதி அறிவித்தது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஆன்-லைன் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் என்று ஐகோர்ட்டு கடந்த 6-ந் தேதி அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு முன்பு ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கொரோனா பரவல் குறித்து தவறான அறிக்கையை ஐகோர்ட்டுக்கு அளித்த தமிழக சுகாதாரத்துறையை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
அதன்படி நேற்று காலை ஐகோர்ட்டு முன்பு வக்கீல்கள் கூடினர். சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் செயலாளர் கிருஷ்ணகுமார், நூலகர் ஜி.ராஜேஷ், பெண் வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் லூயிசால் ரமேஷ், முன்னாள் தலைவர் எஸ்.நளினி, வக்கீல்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்த்தசாரதி, சிவகாமி, தாரா உள்பட ஏராளமான வக்கீல்கள், தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
அவர்களை ஐகோர்ட்டு எதிரே உள்ள பாரிமுனை சிக்னல் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.